ஆபாசமான உள்ளாடை விளம்பரங்களை தடை செய்யக்கோரி தமிழக அரசுக்கு அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்திற்கு வருகை தந்த ராஜேஸ்வரி பிரியா, பகல் நேரங்களில் ஆபாசமான உள்ளாடை விளம்பரங்களை ஒளிபரப்ப பொழுதுபோக்கு சேனல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திய அரசு தலைமை செயலாளரிடம் மனு ஒன்றை அவர் கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேஸ்வரி பிரியா”தலைமை செயலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளேன். பொழுதுபோக்கு சேனல்களில் அளவுக்கு அதிகமாக ஆபாசமான உள்ளாடை விளம்பரங்கள் அதிக அளவில் ஒளிபரப்பப்படுகிறது. அதை குடும்பத்தோடு பார்க்க முடியாத நிலை இருக்கிறது. அதை பகல் நேரங்களில், குழந்தைகள் பார்க்கும் நேரங்களில் தடை செய்ய வேண்டும். இரவு 10 அல்லது 10.30 மணிக்கு மேல் அதை ஒளிபரப்பு செய்யலாம் என்பது சேனல் விளம்பர ஒழுங்குமுறைகளில் வரும் விதி. ஆனால் அதை பகல் நேரத்தில், குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியின் போதே ஒளிபரப்புகிறார்கள். அதுவே வேதனையான விஷயம்.

ஒரு ஜூனியர் நிகழ்ச்சி என்று ஒளிபரப்புகிறார்கள். அதற்கு நடுவில் இந்த உள்ளாடை விளம்பரம் வருகிறது. குழந்தைகள் பார்க்கும் படத்திற்கு நடுவே ஒளிபரப்பாகிறது. இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு அமைதியாக இருக்க முடியாது. இதை தடுப்பது பதவியில் உள்ள பெண் அமைச்சர்களின் பணி. அமைச்சராக இருந்தாலும், எம்.எல்.ஏவாக இருந்தாலும் சமூகத்தை காப்பாற்ற வேண்டும். சமூக நலத்துறை எதற்காக இருக்கிறது ? விளம்பர நிறுவனங்களிடம் அத்துறையினர் பணம் வாங்குகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. சின்னத்திரைக்கென சென்சார் போர்டு வைக்க வேண்டும். இதை அமைச்சர் சரோஜா அவர்கள் முன்னின்று செய்ய வேண்டும். அதை நான் இப்போது செய்கிறேன்.

இது போன்ற விவகாரங்கள் மகளிர் சங்கம் பேசவில்லையா ? என்றே கேட்பார்கள். எம்.எல்.ஏ, அமைச்சர்கள் பேசவில்லையா ? என்று யாரும் கேட்பது இல்லை. அரசியல்வாதிகள் என்றால் திட்டத்திற்கு கமிஷன் வாங்குபவர்கள் என்று மக்கள் எண்ணுகிறார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் இக்கோரிக்கையை முன்வைக்கின்றோம்.

சமூக வலைதளங்களில் கமென்ட்களில் தகாத வார்த்தைகளை பலர் பயன்படுத்துகிறார்கள். பெண்கள் பொதுத்தளத்திற்கு வரும்போது, அவர்களை தடுப்பதற்காக இதை செய்கிறார்கள் என்பது போல உள்ளது. இதை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும். IMEI வைத்து யார் கமென்ட் செய்துள்ளார்கள் என்பதை சைபர் கிரைம் மூலம் காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியும். ஆனால் கண்டுக்கொள்வது இல்லை. பெண்கள் என்றாலே எல்லா துறையிலும் வேறுவிதமாக பேசுகிறார்கள். இத்தனை ஆண்டுகள் கழிந்தும், பெண் அடிமை இன்னும் இருப்பது வேதனையாக இருக்கிறது. விமர்சனங்கள், கருத்து ரீதியிலான மோதல்கள் இருக்கலாம். ஆனால் மன உளைச்சலை ஏற்படுத்தும் எந்த சொற்கலையும் பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பாக கோரிக்கை மனுவை தலைமை செயலாளரிடம் கொடுத்துள்ளோம். அடுத்ததாக காவல்துறை ஆணையரிடம் நாங்கள் மனு கொடுக்க உள்ளோம்.

டாஸ்மாக் டார்கெட் என்பது நாட்டின் அவமானம். தீபாவளி என்றாலே அளவுக்கதிகமாக குடிக்க வைக்கும் அளவுக்கு டார்கெட் நிர்ணையித்து மதுக்கடைகளை செயல்படுத்துகிறார். இந்த கேவலத்தன்மையான அரசாங்கத்தை மாற்றவேண்டும். அதை இளைஞர்கள் தான் முன்னெடுக்க வேண்டும். 90% மக்களை குடிபோதைக்கு அடிமையாக்கும் அளவுக்கு டார்கெட் வைத்து, மார்கெட்டிங் ஏஜன்சி மூலம் குறிக்கோள் வைத்து செயல்படுகிறார்கள். போதை மறுவாழ்வு மையத்தை அதிகப்படுத்தி, மதுவுக்கு அடிமையானர்களை மீட்டெடுக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே மதுவிலக்கு சாத்தியமாகும்” என்று தெரிவித்தார்.

[youtube-feed feed=1]