டெல்லியில் இருந்து புவனேஷ்வர் செல்லும் அதிவேக ராஜதானி எக்ஸ்பிரஸ் அது நிற்க தேவையில்லாத முரி என்ற இடத்தில் 3 நிமிடங்கள் நின்ற விஷயம் இப்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த இடத்தில் இரயிலில் ஒரு பெண் பயணி ஏறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தப் பெண் யார்? அவருக்காக நிற்க தேவையற்ற இடத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் ஏன் நிற்க வேண்டும் என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.
இதுபற்றி முரி ஸ்டேஷன் மாஸ்டர் எம்.எஸ் கான் என்பவரை விசாரித்தபோது தான் தனது மேலதிகாரிகளின் உத்தரவுப்படி ஒரு பெண் பயணியை அந்த ஸ்டேஷனில் பி-3 கோச்சில் ஏற்றிவிட்டதாக சொல்கிறார். அதுமட்டுமன்றி 5-வது லைனில் செல்ல வேண்டிய அந்த ரயில் மூன்றாவது பிளாட்பாரத்தில் நிற்பதற்காக 3-வது லைனுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் மேற்கண்ட தெளிவான வாக்குமூலம் கொடுத்த அதே நபர் மாலையில் அந்தர்பல்டி அடித்து நான் எந்தப் பெண்ணையும் இரயிலில் ஏற்றிவிடவில்லை, இரயில் ஏன் இந்த ஸ்டேஷனில் நிற்கிறது என்று நானும் போய் பார்த்தேன் அவ்வளவுதான் என்று கூறிவிட்டார்.
ராஞ்சியின் சீனியர் டிவிஷனல் மேனேஜர் எம்.ஆர்.ஆச்சாரியாவின் மகளுக்காகத்தான் இரயில் முரியில் நின்றது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை ஆச்சாரியா திட்டவட்டமாக மறுக்கிறார். அந்த ரயிலில் தன் மகள் பயணம் செய்தது உண்மை ஆனால் தன் மகள் வேறு ஒரு ஸ்டேஷனில் இருந்து ஏறியதாக கூறுகிறார். முரியில் ஏன் இரயில் நின்றது என்று தனக்கும் தெரியாது என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தவிருப்பதாக தெற்கு ரயில்வேயின் உயரதிகாரி சஞ்சய் கோஷ் தெரிவித்திருக்கிறார்.