சென்னை

மிழக ஆளுநர் குல தெய்வ வழிபாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என சொல்லவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டு விஷச்சாராயம் அருந்தி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து எதிர்கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த இரங்கல் செய்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குல தெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் எனக் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.

அதாவது “தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோயில் திருவிழாக்களைத் தடைசெய்ய வேண்டும்” என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக செய்தி பரவியது

இந்நிலையில்ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்

“இது சம்பந்தமான அறிக்கைகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதுடன், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புவதால், மாநிலத்தின் உயரிய பதவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையிடம் முறையான புகார் அளித்துள்ளதாக இதன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை உடனடியாக எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பொதுமக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,