அபுதாபி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், 57 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை ஈட்டியது மும்பை அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில், கேப்டன் ரோகித் ஷர்மா 35 ரன்கள் மட்டுமே அடித்தார். ஆனால், ஆட்டத்தை கையில் எடுத்துக்கொண்ட சூர்யகுமார் யாதவ், 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 11 பவுண்டரிகளுடன் 79 ரன்களை விளாசினார்.
ஹர்திக் பாண்ட்யா 19 பந்துகளில் 30 ரன்களை அடித்தார். இறுதியில், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை எடுத்தது மும்பை அணி.
சற்று கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியை, இந்தமுறையும் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஏமாற்றினர். ஸிமித் 6 ரன்கள் மட்டுமே அடிக்க, சஞ்சு சாம்சன் டக் அவுட்டானார்.
ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 5 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 70 ரன்களை எடுத்து நம்பிக்கையளித்தார். ஆனால், அவருக்கு வேறு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆர்ச்சர் 24 ரன்களும், டாம் குர்ரன் 15 ரன்களும் அடித்தனர்.
இறுதியில், 18.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த ராஜஸ்தான் அணி 136 ரன்களை மட்டுமே அடித்து, 57 ரன்களில் பெரிய தோல்வியை சந்தித்தது.
மும்பை சார்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், பெளல்ட் மற்றும் பேட்டிசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 4 ஓவர்களில் பெளல்ட் விட்டுக்கொடுத்த 26 ரன்களே, மும்பை பந்துவீச்சளார் நேற்று விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன்னாகும்.
தனது முதல் 2 போட்டிகளில் மட்டுமே மிரட்டிய ராஜஸ்தான் அணி, அதன்பிறகு தொடந்து தோல்வியை சந்தித்து வருகிறது. சஞ்சு சாம்சனும் தொடர்ந்து சொதப்புகிறார்.