ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று வீசிய கடுமையான  புழுதி புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர், ஜபல்பூர் பகுதியில் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அத்துடன் காற்றும் வீசி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு பலத்த மழையுடன் கடுமையான புழுதிப் புயலும்  வீசியது.

இந்த சூறாவளி காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. பல இடங்களில் சாதாரண கட்டிங்களும் இடிந்து விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.

புழுதி புயல் மற்றும் மழை காரணமாக மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளானார்கள். பல பகுதி களில் உள்ள குடிசை வீடுகள் காற்றில் பறந்தன. மரங்கள் உடைந்து விழுந்ததன் காரணமாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான கார்களும் சேதம் அடைந்தன.

இதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அருகிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.