த்தன்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் பூஜை செய்துக் கொண்டிருந்த பெண் திடீரென மாயமாய் மறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டதில் ரத்தன்பூர் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இந்த சிற்றூர் குடமலானி காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த கிராமத்தில் லீலா என்னும் ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை அன்று இவர்கள் வீட்டில் ஒரு பூஜை நடத்தப்பட்டுள்ளது. அந்த பூஜையில் லீலா கலந்துக் கொண்டுள்ளார்.

பூஜை செய்துக் கொண்டிருந்த லீலா திடீரென மாயமாய் மறைந்து விட்டதாக லீலாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி சுற்றுப்புற மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களில் பலரும் அவர் கடவுளிடம் ஐக்கியமானதாக கருதுகின்றனர். லீலாவின் வீட்டுக்கு பலரும் வந்து வழிபடத் தொடங்கி உள்ளனர்.

கடந்த ஞாயிறு முதல் இந்த சிற்றூருக்கு ஏராளமான மக்கள் வந்து லீலாவின் வீட்டில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். லீலா காணாமல் போனது குறித்து அவர் குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. ஆயினும் குடமலானி காவல் நிலைய காவலர்கள் தாங்களாகவே புகார் பதிவு செய்து லீலாவை தேடி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறை துணை சூப்பிரண்ட் பியாரேலால் மீனா, “இது விஞ்ஞான யுகம். இப்போது ஒரு மனிதரால் நிச்சயம் மாயமாக மறைய முடியாது. அந்தப் பெண் வீட்டை விட்டு எங்கோ சென்றுள்ளார். ஆயினும் அவர் குடும்பத்தினர் இது குறித்து புகார் அளிக்காமல் அவர் மறைந்ததாக கூறி வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.