ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்தது.  

ராஜஸ்தான் மாநிலச் சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைப்பதற்காகத் தீவிரமாகப் போராடி வருகிறது. அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா எனக் கட்சியின் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள் என கட்சியின் தேசிய தலைவர்களும் மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். இந்த மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போது அந்த கட்சி வழங்கியிருக்கும் 7 வாக்குறுதிகளை முன்வைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பாஜக தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் அனல் பறக்கும் வகையிலான பிரசாரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் இந்த பிரசாரம் ஓய்ந்தது.

இன்று காலை 7 மணிக்கு மாநிலத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது.  இங்கு மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களில் ஒன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி 68.24 % வாக்குகள் பதிவாகியுள்ளது.  வரும் 3 ஆம் தேதி அன்று இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன.