கொழும்பு

லங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சேவுக்கு அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே.  31 வயதான இவர் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினராக பதவியில் இருக்கிறார்.    சமீபத்தில் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலுக்கு இவர் பார்வையாளராக அழைக்கப்பட்டார்.    அதை ஒட்டி நமல் மாஸ்கோ சென்று திரும்பி உள்ளார்.

இந்த பயணம் குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எமிரேட்ஸ் விமான நிறுவனம் நான் அமெரிக்காவின் ஹாஸ்டன் வழியாக மாஸ்கோ செல்லும் போது எனக்கு அமெரிக்காவில் இறங்க அனுமதி இல்லை என தெரிவித்தது.   எனக்கு அமெரிக்கா வர தடை விதித்துள்ளதாக கூறப்பட்டது.   ஆனால் அதற்கான காரணம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.   நிச்சயமாக நான் ரஷ்யா செல்வதினாலோ அல்லது எனது பெயரினாலோ என தெரியவில்லை”  என பதிந்துள்ளார்.

”நமல் ராஜபக்சேவுக்கு அமெரிக்க விசா உள்ளது.  அவருக்கு தடை விதித்த காரணம் ஏன் என்பதை இது வரை கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவிக்கவில்லை.    மாஸ்கோ செல்ல தடையும் அவருக்கு கிடையாது” என அவரது அலுவலக உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்புவில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா இருந்தும் மறுப்பு தெரிவிக்கப்பட்ட காரணம் என்ன என்பதை அமெரிக்க சட்டப்படி வெளியிட முடியாது என தெரிவித்துள்ளது.

நமல் ராஜபக்சே மற்றும் அவர் சகோதரர் மீது சர்வதேச பண மோசடிக் குற்றங்கள் உள்ளது குறிப்பிடத் தக்கது.