போபால்: பிரதமர் மோடியை கொலை செய்யுங்கள் என தனது ஆதரவாளர்களிடம் கூறிய ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் திக் விஜய் சிங் முதல்வராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர் ராஜா பட்டேரியா. தற்சமயம் இவர் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கிறார்.
இவர் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, ‘அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால், பிரதமர் மோடியை கொல்ல வேண்டும், என்றும், மக்களை மதம், ஜாதி, மொழி அடிப்படையில் பிரதமர் மோடி பிரிக்கிறார். தலித், பழங்குடியினர், சிறுபான்மையினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என கூறினார்.
இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், காங்கிரஸ் தலைவருக்கு கடும் கண்டனம் எழுந்தது. அவரை கைது செய்ய வேண்டும் என ஏராளமான வழக்குகளும் பாய்ந்தன. பல காவல்நிலையங்களில் பாஜகவினர் புகார் கொடுத்தனர்.
இந்த நிலையில்,ம.பி.யில் தற்போது ஆட்சியில் இருந்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையின பாஜக அரசு அவர்மீது வழக்கு பதிவு செய்தது. பன்னா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கூறிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுகான், “இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்துவோரின் உண்மை முகம் வெளிவந்துவிட்டது” என்று விமர்சனம் செய்திருந்தார்.
மாநில முதல்வர் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தான் அப்படி பேசவில்லை யாரையும் கொல்ல வேண்டும் என்று சொல்ல மாட்டேன். மோடியை வீழ்த்துங்கள் என்று தான் பேசினேன் என பட்டேரியா விளக்கம் அளித்திருக்கிறார்.