மும்பை:

குஜராத்தில் பிரதமர் மோடி செல்வாக்கை இழந்துவிட்டார் என்று ராஜ் தாக்கரே கூறினார்.

ராஜ்தாக்கரே
ராஜ்தாக்கரே

இது குறித்து மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா (எம்என்எஸ்) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே கூறுகையில், ‘‘குஜராத்தில் மோடி செல்வாக்கை இழந்துவிட்டார். அவர் இந்நாட்டின் பிரதமராக நடந்து கொள்ள வேண்டும். குஜராத் முதல்வர் போல நடந்து கொள்கிறார். பெரிய அளவில் அவர் கட்டாய என்ற சுமையை மக்கள் மீது திணித்துள்ளார்.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமை பிரதமர் மிகைப்படுத்துகிறார். தாவூத் உடல் நலம் பாதித்துள்ளதால் அவர் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள மோடி திட்டமிட்டுள்ளார். குஜராத் குறித்து வளர்ச்சி குறித்து தவறாக சித்தரிக்கப்படுகிறது. தொழிற் வளர்ச்சியில் குஜராத்தை விட மகாராஷ்டிரா சிறப்பாக முன்னேறியுள்ளது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘குஜராத் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் பாஜக ஏன் அச்சப்பட வேண்டும். தேர்தலில் சொல்ல வேண்டிய விஷயங்கள் எதுவும் இல்லாததால் பாஜக தாஜ்மகாலை கையில் எடுத்துள்ளது. 2014ம் ஆண்டில் பாஜக வெற்றி பெற்றதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர பிரச்னைகள் குறித்து விசாரிக்க வேண்டும். பாஜக இவ்வளவு அதிகமான வாக்குகள் பெற வாய்ப்பு இல்லை. அதனால் இது விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்.

ரயில்வேயின் செயல்பாட்டை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள மட்டும் ரூ. 1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. தொலை தூர பயணங்களுக்கு தான் புல்லட் ரயில் அவசியம். அதனால் இது மும்பைக்கு தேவையில்லை. மகாராஷ்டிரா முதல்வரின் பேச்சு நல்ல சுவையாக இல்லை. புல்லட் ரயில் வேண்டும் என்றால் அவர் குஜராத்துக்கு செல்ல வேண்டும்.

மக்களை சென்றடையவும், வெற்றி பெறவும் பாஜக சமூக வலைதளத்தை பயன்படுத்துகிறது. ஆனால், தற்போது அவர்களுக்கு எதிராக மக்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு பதிவிடுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி மட்டுமே இந்தியா கிடையாது. மோடியின் முடிவை எதிர்த்தால் அது நாட்டை எதிர்ப்பது என்று அர்த்தமாகாது’’ என்றார்.