சென்னை: மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் விரைவாக அகற்றப்பட்ட நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு  ரூ.1000 உதவி தொகை வழங்கி நன்றி தெரிவித்த துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்  மீண்டும் கனமழை பெய்தாலும் தயார்நிலையில் அரசு உள்ளது என தெரிவித்தார். இதுதான் திமுக அரசின் வெள்ளை அறிக்கை என்றும் கூறினார்.

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்ன உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு வட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் 12 மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி திரும்பி உள்ளதால், நேற்று இரவு முதல் சென்னையில் மழை குறைந்ததது. இதனால், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றினார். சுரங்கபாதை உள்பட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் மோட்டார் பப்புசெட் மூலம் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதனால், இன்று காலை வழக்கமான போக்குவரத்து தொடங்கி உள்ளது.

இந்த நிலையில்,   கடந்த 2 நாள் மழையின்போது தீவிரமாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு, சென்னை, சேப்பாக்கத்தில் உதவிப் பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி நிவாரண உதவிகளை வழங்கினார். சென்னையில் கனமழையிலும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கினார். அத்துடன் அவர்களுக்கு சிற்றுண்டி, உடைகள், துண்டு, பிரெட், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

பின்னர்  செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி,  மழையின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மெட்ரோ பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’. ’’முதல்வரின் ஆலோசனைக்குப் பிறகு அனைத்து விதமான அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி, பணியாற்றினர். இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெய்யவில்லை. மீண்டும் கன மழை பெய்தால், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் மழை வெள்ளம் குறித்து  எடப்பாடி பழனிச்சாமி வெள்ளை அறிக்கை கோரியது குறித்துகேள்வி எழுப்பினர். இதற்கு பதில் கூறியவர், சென்னையில் மழைநீர் எங்கும் தேங்காமல் இருப்பதே வெள்ளை அறிக்கை தான் என பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியின் உதயநிதி ஸ்டாலினுடன் தயாநிதி மாறன் எம்.பி., திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.