சென்னை: 15நாள் முதல் 1மாதத்துக்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும், மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால் பணிகளை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பல இடங்களில் மோட்டார் பம்புசெட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
சென்னை மாநகரின் என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம், டெமலஸ் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, கொளத்தூர் – வேலவன் நகர் மற்றும் டெம்பிள் ஸ்கூல் ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் , “குறைந்தபட்சம் 15 நாட்கள் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுக்கு வந்துவிடும். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்போது நடைபெற்று வரும் பணிகள் திருப்திகரமாக உள்ளது” என்றார் .