சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், வட மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் அதிகன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுகிகளில் கார்கள், இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அதுபோல பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கி உளளது.
இந்த நிலையில், சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்களிலும், ரயில் நிலையங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதை அடுத்து ரயில் போக்குவரத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருப்பதை அடுத்து, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணம் செல்லும் ரயில்களும் ஆவடி ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன .
இதன் காரணமாக, சென்னை புறநகர் ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகள் குவிந்து வருவதாகவும், வெளிமாவட்டம் செல்லும் மக்கள் ஆவடி ரயில் நிலையத்தில் அதிக அளவில் குவிந்ததால் அங்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறைவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். இதனால் ரயில்கள் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், வானிலை நிலவரத்தை பொறுத்து, ரயில்கள் பகுதி நேரமாகவோ முழுவதுமாகவோ ரத்து செய்யப்படலாம். பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.
இருப்பினும், ரயில்வே காவல்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை பயணிகளுக்கு செய்து வருகின்றனர். மழையை பொறுத்து புறநகர் ரயில் சேவைகள் தொடரும் என்று ரயில்வே அறிவித்து உள்ளது.