சென்னை: சென்னையில் இன்று 3வது நாளாக மழை பெய்துவருகிறது. இடையிடையே வெயில் அடித்தாலும், சிறிது நேரத்தில் வானம் மீண்டும் மேகமூட்டத்தால் சூழப்பட்டு மழை பெய்கிறது. இந்த நிலையில், சென்னையில் மேலும் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம்அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக மார்கழி மாதத்தில் குளிர்தான் அதிகமாக இருக்கும் மழை இருக்காது. ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, குளிர் குறைந்துள்ளது. இடையில் சில நாட்கள் வறண்ட வானிலை நிலவியது. ஆனால், மீண்டும அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் கடந்த 4ந்தேதி முதல் மழை பெய்து வருகிறது. இன்று 3வதுநாளாக சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. இதனால், அலுவலகம் செல்வோர், முக்கிய பணிகளுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் வரும் 11-ம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்பதால் பொது மக்கள் மிகுந்த பாதுகாப்புடன், முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.