சென்னை
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாகி வருகிறது. இதையொட்டி தென் தமிழக மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது குமரிக்கடல் பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 48 மணி நேரத்துக்குச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. காற்று பலமாக வீசக்கூடும். எனவே லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது.