சென்னை
இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில் காணப்படுவதாவது :
”நேற்று அதாவது 30/8/21 ஆம் தேதி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, வால்பாறையில் 4 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று தென்மேற்கு பருவக் காற்று காரணமாக 3 வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.
மேலும் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், இதர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
தலைநகர் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம்.”
என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.