சென்னை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், இன்றும், நாளையும் மழை தொடர வாய்ப்புள்ளதாகவும், 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று காலை முதலே அடையாறு, கோடம்பாக்கம், கோட்டூர்புரம், தேனாம் பேட்டை, பெசன்ட் நகர் உள்பட பல இடங்களில் மழை பெய்தது. மேலும் பல பகுதிகளிலும் மழை பெய்ததால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அதுபோல தேனி, திண்டிவனம், தருமபுரி, பென்னாகரம் என தமிழகத்தின் பல இடங்களில் மழை பொழிந்தது.
தர்மபுரி அதனை சுற்றியுள்ள அன்னசாகரம் வெண்ணம்பட்டி பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. அரூர், பாப்பிரெட்டிப்பட்டி,பாலக்கோடு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளில் விடிய விடிய சாரல்மழை பெய்தது. இதனால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது இன்னும் 3 நாளில் தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவித்த சென்னை வானிலை மையஇயக்குனர் புவியரசன், இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்.
தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளையும் நாளை மறுதினமும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவக்கோட்டை, பாலக்கோட்டில் 11 செமீ மழை பெய்துள்ளது என கூறினார். போச்சம்பள்ளியில் 9 செமீ, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குடி, தர்மபுரியில் தலா 8 செமீ மழை பதிவாகி உள்ளது என கூறினார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று பெய்த மழை காரணமாக திருவள்ளூர் அருகே மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்தார் மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளது.