சென்னை: தமிழ்நாட்டில் மழை விடுமுறை விடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தற்போது வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மழைக்காக விடுமுறை அளிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் வரும் வாரங்களில் சனிக்கிழமைகளில் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபாவளியையொட்டி 18ந்தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டால், அதை ஈடுசெய்ய வரும் 18ம் தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.