சென்னை

ன்னும் இரு தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த 3 தினங்களாக ஓரளவு மழை பெய்து வருகிறது.  கடும் கோடையில் அவதிப்பட்ட சென்னை மக்களுக்கு இது மிகவும் நிம்மதியை அளித்துள்ளது.   இன்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அந்த சந்திப்பில் அவர், “தமிழ்நாடு மற்றும் புதுவை மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மற்றும் லேசான மழை பெய்யக் கூடும்.  கோவை, நீலகிரி, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை  பெய்ய வாய்ப்பு உள்ளது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருது நகர் மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை அல்லது மிக மழை பெய்யலாம்.   நேற்று வரை 19% குறைவாக இருந்த தென்மேற்கு பருவமழை தற்போது மழை பெய்ததால் சற்றே மாறுதல் அடைந்துள்ளது.   விரைவில் கனமழை பெய்து சராசரி நிலையை அடையக்கூடும்.

சென்னை நகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.  நகரில் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.  நகரின் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரியும் குறைந்த பட்சமாக 25 டிகிரியாகவும் இருக்கக் கூடும்.

நேற்று பெய்த மழையில் கோவை மாவட்டத்தில் உள்ள சின்ன கல்லாறு பகுதியில் 10 செமீ, கடலூரில் 9 செமீ, அரியலூரில் 5 செமீ மற்றும் புதுக்கோட்டையில் 5 செமீ என பதிவாகி உள்ளது” என தெரிவித்துள்ளார்.