சென்னை: டிட்வா குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நிலை கொண்டுள்ள நிலையில், இன்று  மூன்றாவது நாளாக மழை தொடர்ந்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால், சாலைகளில் வெள்ளம்  பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால்,  பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

சென்னைக்கு 60 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில்   இன்று 3வது நாளாக மழை பெய்து வருகிறது.  தற்போது மணிக்கு 3 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், அதன்பிறகே அதன் நிலை என்ன என்பது தெரிய வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில்  மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். ஆனால், மழை பெய்து கொண்டிருப்பதால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையே தொடர்கிறது. இதனால், பொதுமக்கள், திமுக அரசு, கடந்த 4 ஆண்டுகளாக  மழைநீர் வடிகால் பணி வெறும் கண்துடைப்பே என்றும், ரூ.4ஆயிரம் கோடி ஸ்வாஹா என விமர்சித்து வருகின்றனர்

“டிட்வா” புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி சாலையில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதேபோல் கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம், ஆஜீஷ் உள்ளிட்ட தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்தனர். சாலைகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென மாநகராட்சிக்குப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஏழுமலை நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை எனவும் மழைநீரில் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் உள்ளதால் அச்சமாக உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூர் ராஜாஜி தெருவில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். இ தனால் வீடுகளுக்குள் தேங்கிய மழைநீரை, பாத்திரம்மூலம் குடியிருப்பு வாசிகள் வெளியேற்றுகின்றனர். மேலும் அப்பகுதியில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர். மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது எனவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

24 மணி நேரத்துக்கும் மழை நீடிக்கும் வாய்ப்பு

இதற்கிடையில் சென்னை  உள்பட சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை மற்றும் சில இடங்களில் கனமழை ஏற்படலாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் நான்கு மாவட்டங்களிலும் மீட்புப் படைகள், மழைநீர் பம்புகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்ட அவசர சேவைகள் முழுமையாக தயார்நிலையிலிருக்கின்றன.

மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்து விழுந்தனர். மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை குறித்து தகவல்கள் பின்வருமாறு : கனமழை பெய்த பகுதி பாரிமுனை- 26.5 எண்ணூர்- 26.4 மணலி புதுநகர்- 20.6 பேசின் பாலம்- 20.7 ஐஸ் அவுஸ்- 23.1 வடபழனி- 18.1 மேடவாக்கம்- 17.7 விம்கோ நகர்- 17.6 தண்டையார்பேட்டை- 17.2 கத்திவாக்கம்- 16.8