இந்திய ரயில்வே அடுத்த நிதியாண்டிற்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்றும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற அவர் ம.பி. மாநிலத்திற்கும் ரயில்வேக்கும் இடையிலான மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதுவரை, ரயில் பாதையின் 97 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டில் இது 100 சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து மின்சாரம் வாங்குவது குறித்துப் பேசிய அவர், ரயில்வேக்கு 1,500 மெகாவாட் மின்சாரம் வாங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இது தொடர்பாக, மத்தியப் பிரதேசத்துடன் 170 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் எந்தவொரு புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தையும், விநியோகம் நிலையானதாக இருந்தால், ரயில்வே வாங்கத் தயாராக உள்ளது என்றும் அவர் உறுதியளித்தார்.
மத்தியப் பிரதேசம் அணு மின் நிலையத்தை அமைத்தாலும், ரயில்வே அதையும் வாங்கும். காற்றாலை மின்சாரத்திலும் ரயில்வே ஆர்வம் காட்டுவதாக அவர் கூறினார்.
மத்தியப் பிரதேசத்துடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது போல், மற்ற மாநிலங்களுடனும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட ரயில்வே தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
மத்தியப் பிரதேசத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான சாதனை அளவான ₹14,745 கோடி ரயில்வே பட்ஜெட் வழங்கப்பட்டுள்ளது. 2014-க்கு முன்பு, மத்தியப் பிரதேசத்தில் ஆண்டுக்கு 29-30 கி.மீ. மட்டுமே இருந்த ரயில் பாதைகளின் கட்டுமானம், இப்போது ஆண்டுக்கு 223 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. வேலையின் வேகம் 7.5 மடங்கு அதிகரித்துள்ளது. நிதி 23 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக வைஷ்ணவ் கூறினார்.