டெல்லி: வரும் 12ம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் குறைந்த அளவிலான பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்து உள்ளது.
மே 12ம் தேதி முதல் மெதுவாக குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

சிறப்பு ரயில்கள் டெல்லியில் இருந்து, திப்ருகர், அகர்தாலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, அகமதாபாத், புவனேஷ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மத்காவுன், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்களாக இருக்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த 15 ரயில்கள் சேவை தொடங்கிய புதிய தடங்களில் மேலும் சில சிறப்பு ரயில்களை விட ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதாவது கொரோனா  நோயாளிகளுக்காக 20,000 ரயில் பெட்டிகளை ஒதுக்கிய பிறகும், புலம் பெயர்ந்தோர் சொந்த மாநிலங்கள் போய்ச் சேர தேவைப்படும் 300 ரயில்களுக்கான பெட்டிகள் போக, எஞ்சிய பெட்டிகள் இருப்பதை வைத்து புதிய தடங்களில் ரயில்கள் இயக்கப்படலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை மாலை 4 மணி முதல் தொடங்கும். ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும். ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படாது. நடைமேடை டிக்கெட்டும் கொடுக்கப்பட மாட்டாது.
பயணம் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு மட்டும் தான் ரயில் நிலையங்களில் நுழைய அனுமதி தரப்படும். பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம், அவர்களுக்கு கட்டாயம் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். நோய் அறிகுறிகள் இல்லை என்று கண்டறியப்படுவர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.