டெல்லி:
ஜூன் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஏசி அல்லாத பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் சேவை, ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதியில்நிறுத்தப்பட்டது. தற்போது மே 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், ஜூன் 30 வரை சிறப்பு ரயில்களைத் தவிரப் பயணிகள் ரயில் இயக்கப்படாது என்று ரயில்வே தெரிவித்திருந்தது. அதன்படி முன்பதிவு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, பணம் திருப்பி வழங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது ரயில்வே அமைச்சகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, “நாடுமுழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தவிர ஜூன் 1ம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும்.
இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளாகும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும். அதுபோலவே ரயில்கள் குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளது.
அதுபோன்று, இந்திய ரயில்வே தொடர்ந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்களை இயக்குகிறது. இதுவரை மொத்தம் 1600 ரயில்கள் மூலம் சுமார் 21.5 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
Patrikai.com official YouTube Channel