மயிலாடுதுறையில் ரயில் நிலைய பிளாட்பாரம் சரிந்து விழுந்தது இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
2023 ஆகஸ்ட் மாதம் முதல் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பல்வேறு விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது.
20.46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பணியின் ஒரு பகுதியாக எஸ்கலேட்டர் அமைப்பதற்கான பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எஸ்கலேட்டர் அமைப்பதற்காக 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி பில்லர்கள் எழுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு சென்னை நோக்கி செல்லும் அந்த்யோதயா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சென்ற சில நிமிடங்களில் நள்ளிரவு 12:45 மணிக்கு முதலாவது பிளாட்பாரம் 30 மீட்டர் நீளத்துக்கு பள்ளத்தில் சரிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அப்பொழுது தான் அங்கு நின்றிருந்த பயணிகள் ரயிலில் ஏறிய நிலையில் இந்த மண் சரிவில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இதையடுத்து பள்ளத்தில் விழுந்த இடிபாடுகளை அகற்றும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டது.