சென்னை: சென்னை பரங்கிமலையில் ஓடும் ரயில் முன் கல்லூரி மாணவியை ரயிலில் தளளி கொலை செய்த விவகாரத்தைத் தொடர்ந்து, அந்த மாணவியின் தந்தை உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவியின் தந்தை, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. மகள் சத்யா கொலை செய்யப்பட்ட சோகத்தில், மதுவில் விஷம் கலந்து குடித்து அவர் தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை மாணவர் ஒருவர் ஓடும் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை, மாணவியை கொலை செய்த மாணவனான சதீஷ் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பான சூழலில், மாணவியின் தந்தை மாணிக்கம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் பரவின. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவி சத்யா உயிரிழந்த சோகத்தில் இருந்தவர், மகள் இறப்பு தாங்க முடியாமல் மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரியவந்திருக்கிறது.
விஷம் கலந்த மதுவைக் குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, போகும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.