சென்னை: பா.ஜ.க. ஆட்சியில் சீரழிந்த ரயில்வே துறை” சீரழிந்து இருப்பதாக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்து உள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளை போல, சுதந்திர இந்தியா இதுவரை கண்டதில்லை என்று கூறியுள்ளலார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் ரயில் பயணம் என்பது தொடர் விபத்துகளால் பலி பீடமாக்கப்பட்டு வருகிற செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. நேற்று உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு மூன்று பேர் இறந்தும், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்த செய்தி வெளிவந்திருக்கிறது.

* 2015 மார்ச் 20 அன்று டெராடூன் – வாரணாசி செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில் 34 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

* 2016 நவம்பர் 20 இல் கான்பூருக்கு அருகில் புக்ராயனில் ஏற்பட்ட பெரும் ரயில் விபத்தில் 150 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

* 2017 ஜனவரி 22 இல் ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம், ஹிராகுட் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

* 2017 ஆகஸ்ட் 19 இல் உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர் நகரில் ஹரித்வாருக்கு சென்று கொண்டிருந்த ரயில் விபத்தில் 23 பேர் உயிரிழந்தார்கள்.

* ஜூன் 2023 இல் பாலசோர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர்.

தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி கடந்த 10 ஆண்டுகளில் பலவிதமான ரயில் விபத்துகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இது நம்மை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

இத்தகைய ரயில் விபத்துகள் நிகழ என்ன காரணம் ? யார் பொறுப்பு ? ரயில் விபத்துகள் தொடர்ந்து நிகழாமல் இருக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ? இதற்குரிய நடவடிக்கை எடுக்காத அலட்சிய போக்கினால் கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் ரயில்வே துறை சீரழிந்ததைப் போல எந்த ஆட்சிக் காலத்திலும் நிகழ்ந்ததில்லை.

உலகின் மிகப்பெரிய கட்டமைப்பான இந்திய ரயில்வே துறை கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் எப்படி படுகுழியில் தள்ளப்பட்டது என்பதற்கு நிறைய காரணங்களை கூறலாம். வந்தே பாரத் போன்ற ஆடம்பர ரயில்களை அறிவித்து பெரிய பாய்ச்சல் நிகழ்வது போல பாவலா காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வந்தே பாரத் என்பது ஒரு மோசடி. ஒருமணி நேரம் மிச்சமாகும் பயணத்திற்கு 20 சதவிகிதம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள் மிக மோசமாக தயாரிக்கப்பட்டவை. இதற்குள் பல பெட்டிகள் பழுதாகியுள்ளன. இதுகுறித்து எந்த புகாருக்கும் ரயில்வே துறை பதிலளிப்பதில்லை.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை தொடங்கப்பட்டாலும் நவீன இந்தியாவின் சிற்பி பண்டித நேரு காலம் முதல் காங்கிரஸ் ஆட்சி நிகழ்ந்த 55 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை ரயில்வே துறை கண்டது. இந்தியாவின் பெருமையாகவும், இந்திய ஒருமைப்பாட்டின் சின்னமாகவும் ரயில்வே துறை திகழ்ந்தது. ஆனால், வந்தே பாரத் போன்ற மோசடி ரயில்களை விட்டு மோடி அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, சாதாரண ஏழை, எளிய மக்கள் பயணம் செய்யும் ரயில்களுக்கு தேவையான எந்த வசதிகளும் செய்யப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே திட்டங்களில் தமிழகம் பெரிதும் வஞ்சிக்கப்பட்டு வந்தன. எந்த புதிய ரயில்களும் தமிழகத்திற்கு விடப்படவில்லை. வந்தே பாரத், தேஜஸ் போன்ற ரயில்களால் சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. ஆன்மீகம், சுற்றுலா பற்றி பிரதமர் மோடி அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், செயலில் எதையும் செய்யவில்லை. இந்தியாவின் மிக முக்கியமான கடற்கரை சுற்றுலாத் தலமான கோவாவுக்கு சென்னையிலிருந்து நேரடி ரயில் இல்லை. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை.

தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலமான திருவண்ணாமலைக்கு ரயில் வசதி இல்லை. இப்போது பயணிகள் ரயில் விட்டிருக்கிறார்கள். அது எப்போது போய்ச் சேரும் என்று தெரியாது. திருவண்ணாமலை கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு எந்த வகையிலும் அந்த ரயில் உதவுவதாக இல்லை. தமிழகத்தை வஞ்சிக்கிற நோக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டங்களுக்கு அனுமதி வழங்காமலும், நிதி ஒதுக்காமலும் வெளிநாடுகளில் கடன் பெற முடியாமல் முட்டுக்கட்டைகளை மோடி அரசு போட்டு வருகிறது.

“பா.ஜ.க. ஆட்சியில் சீரழிந்த ரயில்வே துறை” – பட்டியலிட்டு விமர்சித்த செல்வப்பெருந்தகை !
தற்போது பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசாவது ரயில்வே துறையை சீரமைத்து ரயில் விபத்துகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வந்தே பாரத், தேஜஸ் போன்ற அதிவேக சொகுசு ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும். ஏழைகளும், நடுத்தர மக்களும் வசதிபடைத்தவர்களுக்கு இணையாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை போன்ற நகரங்களுக்கு குறைந்த மணி நேரத்தில் செல்லக் கூடிய வகையில் அதிவேக ரயில்களை அதிகமாக இயக்க வேண்டும். சென்னையிலிருந்து ன்மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். அதற்கேற்ப ரயில் பாதைகளை மேம்படுத்த வேண்டும். கிடப்பில் உள்ள கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். விரைவில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

கடந்த பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே துறையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைப் போல தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் புறக்கணிக்கிற முயற்சியில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபடுவார்களேயானால் தமிழகம் – புதுச்சேரியை சேர்ந்த 40 மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிப்பார்கள்.

இன்றைய கால சூழலில் ஏழை, எளிய நடுத்தர மக்களின் மிகமிக அத்தியாவசியப் பயணமாக ரயில் பயணம் அமைந்திருக்கிறது. அத்தகைய பயணங்களில் எந்தவித விபத்தும் ஏற்படாது என்கிற முழு நம்பிக்கையோடு மக்கள் பயணிக்கிற வகையில் விபத்துகளை முற்றிலும் தடுத்து ரயில் பெட்டிகளில் கழிவறை உள்ளிட்ட வசதிகளை பெருக்கி பொது மக்கள் பயணிக்கிற வகையில் வசதிகளை மேம்படுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்களை எடுக்கவில்லை என்றுச் சொன்னால் மக்களின் கோபத்திற்கு மோடி அரசு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.