டில்லி:
விமானப் பயணிகளுக்கு வழங்கப்படுவது போல் முன் கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டண சலுகை வழங்க ரெயில்வே ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த வாரத்தின் தொடங்கத்தில் இந்த குழு தனது அறிக்கையை ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில்,‘‘ஒரு ரெயிலில் காலியாக இருக்கும் இருக்கைகளின் அடிப்படையில் கட்டண சலுகை அளிக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு முன் டிக்கெட் முன் பதிவு செய்யும் பயணிகளுக்கு பெரிய அளவில் கட்டண சலுகையை விமான நிறுவனங்கள் வழங்குகின்றன. அதேபோல் ரெயில் பயணிகளுக்கும் 20 முதல் 50 சதவீதம் வரை சலுகை வழங்கலாம்.
அதேபோல் சார்ட் தயார் செய்யப்பட்ட பின்னர் புக்கிங் செய்யும் பயணிகளுக்கும் கட்டண சலுகை அளிக்க வேண்டும். இது இடங்களுக்கு ஏற்ப ரெயில் புறப்படுவதற்கு 2 நாட்கள் முதல் 2 மணி நேரம் வரை வழங்கலாம். விமானங்களில் முன் வரிசை இருக்கைகளுக்கு பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்துவது போல் ரெயிலில் கீழ் படுக்கை வசதிக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். இதில் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கு விலக்கு அளிக்கலாம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், ‘‘அதிகாலை 12.01 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மற்றும் மதியம் 1 மணி முதல் 5 மணி வரை என இது போன்ற சவுகர்யமான நேரங்களில் சென்றடையும் ரெயில்களின் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்யலாம்.
பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்தவிட்டு இதர நாட்களில் அதை குறைத்துக் கொள்ளும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். இரவு ரெயில்கள் மற்றும் கேண்டீன் வசதியுடன் கூடிய ரெயில்களின் பரிமீயம் கட்டணம் வசூலிக்கலாம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குழுவில் சில ரெயில்வே அதிகாரிகள், நிதி ஆயோக் ஆலோசகர் ரவீந்தர் கோயல், ஏர் இந்தியா வருவாய் நிர்வாக செயல் இயக்குனர் மீனாட்சி மாலிக், பேராசிரியர் ஸ்ரீராம், டில்லி லீ மெரீடியன் ஓட்டல் வருவாய் இயக்குனர் இதி மணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.