அமெரிக்காவில் ரயில்வே ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை விதிகள் ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமென வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை அன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தொழிற்சங்கங்களுடன் பைடன் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு 24% ஊதிய உயர்வு அளிக்க அரசு முன்வந்ததை அடுத்து ஒருசில சங்கங்கள் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது.

எனினும் ஊழியர்கள் விடுப்பு விவகாரத்தில் அனைத்து சங்கங்களும் மாற்றம் வேண்டும் என்று கோரிவருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிதாக புள்ளிகள் அடிப்படையில் ஊதியம் வழங்கும் முறை கடைபிடிக்கப்படுகிறது.
வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் விடுப்பு எடுக்கக்கூடாது எனவும் விடுப்பு எடுப்பவர்களுக்கு அவர்கள் விடுப்பு எடுக்கும் நாளின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் புள்ளிகள் குறைக்கப்படுவதோடு சம்பளபிடித்தம் செய்யப்படும்.
ஊழியருக்கான இந்த நன்நடத்தை புள்ளிகள் ஆண்டு துவக்கத்தில் 30 என்று நிர்ணயிக்கப்பட்டது.
நடத்தை விதிகள் காரணமாக புள்ளிகள் 0 அளவுக்கு குறைந்தால் முதல் முறை அந்த ஊழியர் 10 நாள் இடைநீக்கம் செய்யப்படுவார்.
பின்னர் பணிக்கு சேறும் போது 15 புள்ளிகளுடன் தொடங்கும் அவரது பணி மீண்டும் 0 புள்ளிகளை அடைந்தால் இரண்டாவது முறை 20 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்றும் மூன்றாவது முறை வேலையை விட்டு நீக்கப்படுவார் என்றும் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிகளில் தெரிவித்துள்ளது.
அதேபோல், விடுமுறை நாட்களில் ஏற்படும் பணியாளர் பற்றாக்குறையை தீர்க்க 2 மணி நேர அவகாசத்தில் பணிக்கு திரும்ப உத்தரவிடும் அதிகாரத்தை அனைவரும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
புள்ளிகள் அடிப்படையிலான இந்த புதிய விடுப்பு கொள்கையை கைவிடுமாறு கோரிக்கை வலுத்து வருவதோடு இதனால் ஊழியர்கள் உடலளவிலும் மனதளவிலும் சோர்வடைந்துள்ளனர் என்று ஊழியர் சங்கங்கள் கூறிவருகிறது.
ஊழியர் சங்கங்களுடன் அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் பேச்சுவார்த்தை வெற்றிபெறாவிட்டால் நாளை நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது. ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சரக்கு சேவை முன்பதிவை குறிப்பாக குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் எடுத்து செல்லப்படும் பொருட்களின் முன்பதிவை கடந்த சில நாட்களாக ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்திருப்பதால் அத்தியாவசிய பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்ல அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.