டெல்லி
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்றிப் பயன்படுத்தலாம் என இந்தியன் ரயில்வே நம்பிக்கையூட்டும் செய்தியை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஏப்ரல் 14 வரை நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பிரதமர், அந்நோய்த் தொற்று ஏற்பட்டோரை தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க புதிய வழிகளை ஆராயும் படி அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையர் சுனில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரயில்வேயில் 12617 இரயில்கள் உள்ளன. ஒவ்வொரு ரயிலிலும் 24 முதல் 30 பெட்டிகள் வரை இருக்கும். சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஒரு ரயிலை கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்காக சிகிச்சை அளிக்கும் தனிமை வார்டுகளாக மாற்ற முடியும். அதில் கன்சல்டேசன் அறை, மருந்தகம், ஐசியு, ஸ்டோர் ரூம், கழிவறை வசதிகளும் சிறப்பாக செய்யப்படும்.
ஒவ்வொரு இரயிலிலும் 1000 படுக்கைகளை உருவாக்க முடியும். இதன் மூலம் ரயில்வே உதவியுடன் விரைவாக 1 கோடி படுக்கைகளை உருவாக்கலாம். நம்நாட்டில் 7500 பெரிய மற்றும் சிறிய ரயில் நிலையங்கள் உள்ளன. இதன்மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ரயில்களை உடனடியாக கொண்டு சென்று சேவையாற்ற இயலும்.
தற்போது இந்தியா முழுதும் இரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் உடனடியாக இரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய இரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் இரண்டு இரயில்கள் நிற்க முடியும். எனவே 1000 படுக்கைகள் கொண்ட இரயிலில் 2000 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
133 கோடி மக்கள் தொகையில் 10 சதவீத மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் 10 கோடி படுக்கைகளாவது தேவைப்படும் எனவும் அவர் கூறினார். எனவே இரயில்வேயின் இந்தத் திட்டம் நெருக்கடி சூழலில் நமக்கு மிகச்சிறந்த பயனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது…