சென்னை:  ரயில் தண்டவாளம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து புறப்படும் 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது

மேலும் புறநகர் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த நிலையில், சென்னை வியாபார்பாடி அருகே  உள்ள தண்டவாளம் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளதால், சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும்   4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

16058 – திருப்பதி-சென்னை (சப்தகிரி எக்ஸ்பிரஸ்)

22649 – சென்னை-ஈரோடு (ஏர்காடு எக்ஸ்பிரஸ்)

16203 – சென்னை-திருப்பதி (திருப்பதி எக்ஸ்பிரஸ்)

16021 – சென்னை-மைசூரு (காவிரி எக்ஸ்பிரஸ்)

ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று(அக்.14) மாலை 6.40 மணிக்கு புறப்பட்ட லோக்மான்யா திலக் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12613) ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். நேற்று(அக்.14) இரவு 11.45 மணிக்கு புறப்பட்ட மங்களூரு சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (22638) திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

இன்று(அக்.15) இரவு 8.50 மணிக்கு புறப்படும், சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (22639), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும்.

நேற்று(அக்.14) மாலை 4.45 மணிக்கு புறப்பட்ட இந்தூர் – கொச்சுவேலி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22645), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். இந்த ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

மேலும்,  தண்டவாளங்களில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் குறைவான வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும். இதனால் ரயில்கள் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  வானிலை நிலவரத்தை பொறுத்து, ரயில்கள் பகுதி நேரமாகவோ முழுவதுமாகவோ ரத்து செய்யப்படலாம். பொதுமக்கள் மிகவும் அவசியமாக இருந்தால் மட்டும் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.