டெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் உள்பட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக  அல்-ஃபலா பல்கலைக்கழகம் உள்பட 25க்கும் மேற்பட்டஇடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

சமீபத்தில்,  டெல்லியில்  நடைபெற்ற  கார் வெடிப்பு சம்பவத்துக்கு முன்னதாக ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதன் காரணமாக பெரும் சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் தேதி மாலை கடும் நெரிசலுக்கு மத்தியில்  டெல்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொடூர செயல்களில் ஈடுபட்டவர்கள்  மக்களை காக்க மருத்துவம் படித்தவர்கள் என்பது தெரிய வந்தது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக சில மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. மேலும், பயங்கரவாதிகள் தொடர்புடையவர்கள் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் படித்த பல்கலைக்கழகமான அல்-ஃபலா பல்கலைக்கழகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

அரியானாவின் ஃபரிதாபாத்தில் அமைந்துள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் தலைமையிடம்  டெல்லி மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று(நவ.18) காலைமுதலே சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இதில் சம்பந்தப்பட்ட நபர்களிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய அல் ஃபலா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜாவத் அகமது சித்திகியின் தம்பி மஹ்மூத் அஹ்மத் சித்திகி (50) மத்திய பிரதேச காவல் துறையால் ஹைதராபாத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும், 25 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.  தொடர்ந்து, தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள காசிகுண்டைச் சேர்ந்த 20 வயதுடைய ஜசிர் பிலால் வானி என்ற டேனிஷை என்ஐஏ அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். இவர், ட்ரோன்களை இயக்குதல் மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பதில் திறன்பெற்றவர் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

ஜசிர் பிலால் வானி என்பவர் தொழில்நுட்ப ரீதியாக தில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு உதவியதும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  பயங்கரவாத சதித்திட்டங்களுக்கு உதவும் வகையில் ட்ரோன்களை சரிபார்த்தல், ராக்கெட்டுகளை வடிவமைத்தல் போன்ற பணிகளையும் ஜசிர் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் வெளியான தகவல்களின் அடிப்படையில், ஹமாஸ் பாணியில் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தாக்குதலை நடத்தவும், இதனால், பலரை கொல்லவும் திட்டமிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் திட்டங்கள் தோல்வியடைந்ததால், ​​கார் குண்டு வெடிப்பை செயல்படுத்த முடிவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜசிர் பிலால் வானியும் அவரது சித்தப்பாவும், இயற்பியல் பேரசிரியருமான நசீர் அகமது வானியை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றபோது, வானியின் தந்தை பிலால் அகமது ஞாயிற்றுக்கிழமை காலை என்ஐஏ அதிகாரிகள் முன்னதாகவே தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.  இதில், அவர் திங்கள்கிழமை காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெடிகுண்டு சம்பவத்துக்காக காரை வாங்கிக்கொடுத்து அதனை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் உன் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏற்கெனவே அமீர் ரஷீத் அலி என்பவரை என்ஐஏ அதிகாரிகள்  கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.