சென்னை,
தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் நடைபெற்று வரும் ரெய்டால் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.
இன்று அதிகாலை முதலே தமிழக தலைமை செயலாளர் வீடு மற்றும் அவரது மகன் வீடு உள்பட 13 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.
தலைமை செயலாளர் ஒருவர் வீட்டில் ரெய்டு நடைபெறுவது தமிழக வரலாற்றிலேயே இது முதன்முறையாகும். இந்த செயல் தமிழகத்திற்கு அவமானத்தை தேடி தந்துள்ளது.
ராவ் வீட்டில் நடைபெற்று வரும் ரெய்டால் தமிழக அமைச்சர்கள் பலர் கிலி பிடித்து பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
ராவால் பதவி சுகம் பெற்ற அதிகாரிகள் மற்றும் ஊழல் புரிந்தவர்கள் செய்வதறியாது ‘திக் திக்’ மனநிலையில் உள்ளனர். ஆனால், அவரால் பாதிக்கப்பட்ட அதிகாரிகளோ, ரெய்டை வரவேற்று பேசி வருகிறார்கள்.
தலைமை செயலர் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் தமிழக அமைச்சர்கள் மட்டுமல்லாது அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளது தலைமை செயலகத்தில் காண முடிகிறது.
இந்த சோதனையின் காரணமாக ராம் மோகன ராவ் தங்களையும் காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அதிகார மையங்கள் அச்சத்தில் உள்ளது.
தலைமை செயலர் வீட்டு சோதனை பற்றி உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ராம மோகன ராவ், அவரது மகன் மற்றும் உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
சோதனையையொட்டி அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டை சுற்றி துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.