சென்னை,
மிழக தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட்டையில் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
பணம் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தபிறகு, கருப்பு பணம் பதுக்கி வைத்திருந்தவர்கள் நாடு முழுவதும் அதிரடி ரெய்டுமூலம் கண்டறியப்பட்டனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு பணம் சிக்கியதாக மத்தியஅரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தை சேர்ந்த சேகர் ரெட்டி என்பவரிடம் இருந்து 100 கோடிக்கும் மேலான கருப்பு பணமும், 100 கிலோவுக்கு அதிகமான தங்கமும் கைப்பற்றப்பட்டது.

இந்த சேகர் ரெட்டி என்பவர் தமிழக முக்கிய காண்டிராக்டர்களில் ஒருவர் என்பதும், தலைமை செயலாளர் ராம்மோகன் ராவுக்கும் நண்பர் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இன்று அதிகாலை முதல் சென்னை அண்ணாநகரில் உள்ள தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன்ராவ் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து சென்னை கோட்டை  தலைமை செயலகத்தில் உள்ள தலைமை செயலாளர் அறையிலும் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள இச்செயலால்  தமிழக முதல்வர், அமைச்சர்கள்,  அரசு அதிகாரி கள் உள்பட தலைமை செயலக வட்டாரமே கிடுகிடுத்து போய் உள்ளது. தலைமை செயலகத்தை சுற்றி துணை ராணுவப்படையினர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதன் காரணமாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போதைய தலைமை செயலாளர் ராம்மோகன் ராவை டிஸ்மிஸ் செய்யலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
ராம்மோகன் ராவ் வருமானவரித் துறையினரால் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ராம்மோகன் ராவ் வீட்டில் இருந்து ஏராளமான தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் உலாவந்த வண்ணம் உள்ளன.
தலைமை செயலாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவதால் அவரால் பயன் அடைந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பயத்தில் குலைநடுங்கி போய் உள்ளனர்.
ராம் மோகன ராவ் தங்களையும் காட்டி கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் அதிகார மையங்கள் அச்சத்தில் உள்ளது.
இதற்கிடையில்  விஜயவாடாவில் உள்ள ராம மோகன ராவ் உறவினர் வீட்டில் 40 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
வருமான வரி ரெய்டு நடக்கும் ராம மோகன ராவ் வீட்டுக்கு முன் பொது மக்கள் குவிந்து வருகின்றனர். ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகியான தலைமை செயலாளரே வருமான வரி சோதனைக்கு ஆளாகி இருப்பதை அறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.