நெட்டிசன்

 

கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் “1982ல் என் வீட்டில் காவல் துறையின் ரெய்டும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும்” என்ற தலைப்பில் பதிவிட்டிருக்கும் முகநூல் பதிவு..
————————————

சமீப காலமாக “சிபிஐ ரெய்டு” எனப்படும் ப்ரேக்கிங் நியூஸ் பரபரப்பாக பேசப்படுகின்றன. அதாவது அரசியலில் பழிவாங்கும் போக்கிலோ, நாட்டு விரோதிகளோ என சூழல்களை சொல்லிக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் சிலர் வீடுகளில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த வாடிக்கை 1991ல் இருந்து நடந்து கொண்டு வருகிறது.
கடந்த 22-05-1982 அன்று திரு. பழ.நெடுமாறன் அவர்கள் வீட்டிலும் எனது வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி. மோகன்தாஸ் மேற்பார்வையில் காவல் துறையின் ரெய்டு நடத்தப்பட்டது.

ஏனெனில் என்னுடன் விடுதலைப்புலிகள் பிரபாகரனும், அவருடைய சகாக்களும் தங்கியி ருந்தனர். மயிலாப்பூரில் தங்கியிருந்த போது இந்த நிகழ்வு நடந்தேறியது. 35 ஆண்டுகள் கடந்து விட்டன. சுதந்திரம் பெற்றதில் இருந்து அதுவரை இதுபோல காவல்துறையின் சோதனைகள் அதிகம் நடந்தது இல்லை. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசர நிலை காலங்களில் ஓரிரு இடங்களில் நடந்தது.

அப்படி காவல் துறையினர் சோதனை நடத்திய போது நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி நின்றோமே தவிர முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு செல்லவில்லை.

இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் தம்பி பிரபாகரன் பற்றி பதிவு செய்யவும் இந்த ரெய்டுகள் உதவியாக இருக்கின்றன. அன்று 1982ல் என் வீட்டில் ரெய்டு நடத்தப்படுவதற்கு சொல்லப்பட்ட காரணம் என்னவெனில் தம்பி பிரபாகரனும் அவரது ஆரம்பக்கால சகாக்களான பேபி சுப்ரமணியன், நேசன், செல்லக்கிளி ஆகியோர் என் வீட்டில் தங்கியிருந்தனர் என்பது தான். என்னிடம் அது குறித்து விசாரித்தார்கள். ஆம், தங்குவதற்கு இடம் அளித்தேன். என் இனப் போராளிக்கு, தமிழின விடுதலைப் போராளிகள் தங்குவதற்கு இடம் அளித்தேன் என்பதை பெருமிதத்துடன் வாக்குமூலம் அளித்தேன்.

அந்த வழக்கில், நானே சாட்சியாகவும், வழக்கறிஞராகவும் ஆஜரானேன். பிற்காலத்தில் இந்த வழக்கு பிரபாகரன் நீதிமன்றத்துக்கு வராததால் 23-11-2012ல் சென்னை மாநகர் 7வது கூடுதல் நீதிமன்றத்தில் (வழக்கு எண். எஸ்.சி.8/1983) தள்ளுபடியானது. திரும்பவும் பழைய செய்திக்கு வருகின்றேன்.

அந்த சோதனையில் ஆயுதங்களோ, பணக்கட்டுகளோ பறிமுதல் செய்யப்படவில்லை. அவற்றை எல்லாம் விட விலை மதிப்பிடமுடியாத புத்தகங்கள், சில நினைவுகளின் அடையாளங்களை காவல் துறையினர் அள்ளிச் சென்றனர்.

காமராஜரிடம் அறிமுகமாகி, மாணவர் அரசியல் இயக்கங்களில் பணியாற்றியதெல்லாம் நெஞ்சத்தை தணிக்கும் பழைய நினைவுகள் தாங்கிய கருப்புவெள்ளைப் படங்கள், பிரதமர் இந்திரா காந்தி, மொராஜி தேசாய், ஜெயப்ரகாஷ் நாராயணன், கவிஞர் கண்ணதாசன் போன்ற ஆளுமைகளோடு எடுத்த கருப்பு, வெள்ளை புகைப்படங்கள் யாவும் காவல் துறை எவ்வித மனித நேயமில்லாமல் எடுத்து சென்றுவிட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் – முகுந்தன் இடையே சென்னை பாண்டி பஜாரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை காரணம் காட்டி பிரபாகரன் தங்கியிருந்த இடம் என கூறி காவல் துறை சோதனை நடத்தியது.

உடன் தங்கியிருந்த பிரபாகரனின் உடைமைகளையும் என் மயிலாப்பூர் இல்லத்தில் இருந்து எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் ஐ.ஜி. மோகன்தாஸ் தலைமையில் 6 மணி நேரம் சோதனை நடத்தி அனைத்து உடைமைகளையும் அள்ளிக்கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த சோதனை, பாண்டிபஜார் சம்பவத்திற்கு பின்னர் ஈழப்போரில் விடுதலைப் புலிகள் என்றொரு இயக்கமும் அதன் தலைவராக பிரபாகரன் இருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது என்றால் அது மிகையாகாது. தலைமறைவு வாழ்க்கையில் இருந்த பிரபாகரனின் படம் முதன்முறையாக தமிழக பத்திரிக்கைகளில் அன்று தான் வெளியானது. அதுவரை ஈழத்தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம் ஆகியோர்களை மட்டுமே ஈழத்தமிழர்களின் தலைவர்களாக உலகம் அறிந்திருந்தது.

தலைவர்களோடு நான் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களாவது கிடைக்குமா என்ற ஏக்கத்தில் ஐ.ஜி மோகன்தாஸை கடற்கறை சாலையில் உள்ள காவல் துறை இயக்குநரகத்தில் சென்று சந்தித்தேன். “என் கட்சிக்காரர்களுக்காக வழக்கு நடத்தும் கேஸ்கட்டுகளை கொண்டு சென்று விட்டீர்கள், நான் எப்படி அந்த வழக்குகளை நடத்த முடியும்” என அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

எம்.ஜி.ஆரின் அரசாங்கத்தில் அதிகார பலம் வாய்ந்த ஒருவர் என்ற அதிகார போதையில் கிண்டலும் கேலியாகவும் பதில் அளித்தார் மோகன்தாஸ். கோபத்தில் உச்சத்திற்கு சென்ற நான் “போயா, நான் முடிந்ததை பார்க்கின்றேன்” என்று கூறிவிட்டு எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து முறையிட்டேன். அவர் அன்றைய உள்துறை செயலாளர் டி.வி.வெங்கட்ராமனை சென்று பார்க்கும்படி கூறினார்.

அந்த சோதனையில் மேசை, நாற்காலி, கட்டில், மெத்தை, துணிகள், சமையல் பாத்திரங்கள் தவிர அனைத்து பொருட்களையும், பிரபாகரன் பயன்படுத்திய சில உடமைகளை அள்ளிச் சென்றனர். வெங்கட்ராமனை சந்தித்த போது அவரும் பார்க்கிறேன் என்றார். தலைமைச் செயலகத்துக்கும், கடற்கரை எதிரே உள்ள காவல்துறை தலைமையகத்திற்கும் அலைந்து அலைந்து என் காலணிகளே தேய்ந்தது. தம்பி பிரபாகரன் அவர் பயன்படுத்தி வந்த ரெமிங்டன் டைப்ரைட்டிங் மிஷினை மட்டும் மீட்டுத் தரும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.

அதனை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தேன். இதற்கிடையில் தினமும் சென்னை மத்திய சிறைச்சாலைக்கு சென்று பிரபாகரன், முகுந்தனை சந்திப்பது வாடிக்கை. பிரபாகரனை இலங்கை அரசிடம் ஒப்படைக்க கூடாது என்று பழ.நெடுமாறன் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் 29-06-1982ல் நடைபெற்றது.

பிரபாகரனை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்க 05-08-1982ல் நான் மனு தாக்கல் செய்து அவருக்கு பிணை உயர்நீதிமன்றம் வழங்கியது. ஆனால் அவர் சிறையில் இருந்து 06-08-1982 மாலை விடுவிக்கப்பட்டு மதுரையில் தங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் வெளியே வந்தார். இதை பற்றிய தனிப்பதிவை பின்னொரு நாளில் இடுகிறேன்.
விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள், அவர்களுக்கு கடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள்.

கண்ணகி கோட்டம் தமிழர்களுக்கான உரிமை கோரி வழக்கு,
தேசிய நதிநீர் இணைப்புக்காக அதாவது கங்கை – காவேரி ஆகிய நதிகளை குமரியோடு இணைக்க உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு.
பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மூன்றடுக்கு முறைக்காகவும் சட்டப் போராட்டம்.
ஊழலை ஒழிக்க தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுநல வழக்கு.
1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூட வேண்டி தொடர்ந்த வழக்கு. இதற்காக இரண்டாம் முறையும் 2016ல் இன்னொரு வழக்கையும் தொடுத்தேன்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் 1984ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட மேலவையை திரும்பக் கொண்டுவர வழக்கு.
சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமை கோரி வழக்கு.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு
காவிரி பிரச்சனையில் தேவகவுடா பிரதமராக பதவி ஏற்புக்கு எதிரான வழக்கு…
என பல்வேறு வழக்குகளை மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையத்திலும், பொதுமக்கள் நலனை மனதில் கொண்டு பொதுநலன் கருதி செய்த காரணத்தால் இந்த ரெய்டுகள் பற்றிய பயமோ, கவலையோ அப்போது எள்ளளவும் இல்லை.

காரணம் மடியில் கனமில்லை. காலச் சக்கரங்கள் சுழன்றுவிட்டன. தற்போது நிலைமைகள் வேறு. இன்றைய வணிக அரசியலில் எல்லாமே தன்னைச் சுற்றியே சுயநலமே பிரதானம்.

1972 முதல் 46 ஆண்டுகளாக நேர்மையுடனும் தொய்வின்றி முழுமையாக பணியாற்றி வருகின்றேன்.

இதுவே அரசியல் பணி. எம்.எல்.ஏ மற்றும் எம்.பி பதவிகளை கால் செருப்பாக கருதி இதுபோன்ற ரெய்டுகளுக்கு அஞ்சாமல் பணி செய்ய நேர்மை வேண்டும்.