டில்லி:
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராகுல்காந்தி, உடனடியாக தனது டிவிட்டர் சமூக வலைதள பக்கத்தில், குறிப்பிடப்பட்டிருந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் என்ற வாக்கியத்தை அகற்றி விட்டு , மக்களவை எம்.பி. என்று மட்டுமே பதிவிட்டு உள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்றார். அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டினார்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ராகுல்காந்தியின் எளிமையான நடவடிக்கை, மக்களிடம் பழகும் பாங்கு போன்றவற்றால் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், பெருந்தலைகள், அவரின் முயற்சிக்கு தோள்கொடுக்க மறுத்து விட்டதால், நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் தோல்வியை சந்தித்தது. இதன் காரண மாக தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், தனது டிவிட்டர் பக்கத்திலும், இதுவரை போடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற வாக்கியத்தை அகற்றி விட்டு, லோக்சபா எம்.பி என்பதை மட்டுமே பதிவிட்டு உள்ளார்.