சென்னை:

அனைத்து ஏழைகளுக்கும் குறைந்தபட்ச வருவாய் ஈட்டுவதற்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டியுள்ளார்.


சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு விவசாயிகளே காரணம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, ஒவ்வொரு ஏழைக்கும் குறைந்தபட்ச வருவாய் ஈட்டுவதற்கான உத்தரவாத திட்டதைச் செயல்படுத்துவோம் என்று அறிவித்தார்.

இது குறித்து, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:

சத்தீஸ்கரின் நடந்த விவசாயிகள் பேரணியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இந்த அறிவிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். இது ஏழைகளின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த அடிப்படை வருவாய் குறித்த ஆலோசனை கடந்த 2 ஆண்டுகளாக விரிவாக நடந்துள்ளது. இந்த அடிப்படையை செயல்படுத்தும் சூழலும் தேவையும் தற்போதுதான் கனிந்துள்ளது.

ராகுல்காந்தியில் இந்த அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் சேர்ப்போம். 2004-2014 வரையிலான காலக்கட்டத்தில் 14 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் உத்தரவாதம் செயல்படுத்தப்பட்டால்,வறுமையை முற்றிலும் துடைத்தெறியலாம். ராகுல்காந்தி அளித்துள்ள இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் காங்கிரஸ் கட்சி கண்டறியும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.