டில்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில், மத்தியில் 5 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் என்றும், அதற்கான இலக்கு கிடைக்காவிட்டால்,  கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்  குலாம் நபி ஆசாத் தெரிவித்து உள்ளார்.

17வது மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று கடைசிகட்ட பிரசாரம் நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சிம்லா பொதுக்கூட்டத் தில் பேசிய குலாம்நபி ஆசாத், தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் கட்சி வந்தால்கூட,  மாநில கட்சிகளில் இருந்து ஒரு தலைவர் பிரதமராக வர விரும்பினால்கூட அதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும். என்று தெரிவித்தார்.

இந்தநிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் ஹரோலியில் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, காங்கிரஸ் கட்சி பிரதமர் பதவியை கோராது என்பதில் உண்மையில்லை என்று மறுத்தவர்,  ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்து நாட்டில் 5 ஆண்டுகள் நிலையான ஆட்சி தரும் என்றும்,  நாட்டின் பிரதமராக வருவதற்கு ராகுல் காந்திக்கு தகுதிகள் இருக்கின்றன என்று தெரிவித்தார்.

மேலும்,  மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்றவர், ஒருவேளை தங்களுக்கு தனிபெரும்பான்மையான  273 இடங்கள் கிடைக்காவிட்டாலும, கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை அமைப்போம் என்று தெரிவித்தார்.

நாட்டின் மிகப் பெரிய கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவராக இருப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.