சென்னை:
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று டில்லியில் ராகுல் பதவியேற்ற சில நாட்களில் தமிழகத்தில் ஸ்டாலின் பதவி ஏற்பார் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்றதாக வரலாறு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தீவிர பிரசாரம் மேற்கொண்ட வரும் ப.சிதம்பரம், தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்காக சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம், தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி எப்போதும் வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.
கடந்த 1971, 1996, 1998, 2004, 2009 நடைபெற்ற 5 மக்களவை தேர்தலின்போதும், காங்கிரஸ் திமுக கூட்டணி அமைக்கப்பட்டு, அந்த 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது,அப்போது கலைஞர் நம்மோடு இருந்தார் என்று சுட்டிக்காட்டினார். அதுபோல இந்த முறையும் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று கூறியவர், திமுக – காங்கிரஸ் கூட்டணி தோற்றதாக வரலாறே கிடையாது என்றார்.
அதைத்தொடர்ந்து திருவள்ளுர் கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம், தேர்தலில் வெற்றி மத்திய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன், சில வாரங்களிலே தமிழகத்தில் கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இன்னொரு தேர்தல் நடக்க இருக்கிறது.. அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும், திமுக ஆட்சி பொறுப்பேற்கும் என்று தெரிவித்தவர், டெல்லியில் ராகுல் பிரதமாரக பொறுப்பேற்ற சில வாரங்களிலே, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார் என்றும் கூறினார்.
ப.சிதம்பரத்தின் பேச்சு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் தமிழக அரசு கலைக்கப்படும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.