ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணைமுதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, சச்சின் பைலட் தனது துணைமுதல்வர்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு கெலாட் ஆட்சி பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து, அங்கு மாநில அரசு பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி வரும் 14ந்தேதி மாநில சட்டமன்றம் கூற உள்ளது.
இதற்கிடையில், தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலை வாங்க பா.ஜ.க. குதிரை பேரம் நடத்துவதாக முதல்வர் அசோக் கெலாட் முதலில் குற்றம் சாட்டினார். இந்த நிலையில், சச்சின் பைலட் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் சமாதானம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அசோக் கெலாட் அரசு நெருக்கடியிலிருந்து தப்பிப்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 14ந்தேதி) அம்மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, ராஜஸ்தான் பா.ஜ.க. தலைவர் சதிஷ் பூனியா கூறுகையில், அசோக் கெலாட்டின் ஏஜெண்டாக ராஜஸ்தான் போலீசார் செயல்படுகின்றனர், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை குறி வைப்பதால் அவர்கள் சுற்றுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றாலும் அங்கு அவர்கள் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.