டில்லி:

குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் கூறினார்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. எனினும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றியின் அளவு குறைந்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் கிடைத்த தொகுதிகளை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த அசோக் கெலாட் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் ராகுல்காந்தி அருமையான ஒரு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். காங்கிரஸ் கட்சியின் பிரச்சார வழிமுறையும், ராகுல்காந்தி மேற்கொண்ட பேருந்து பயணங்களும் அருமையான ஒரு பிரச்சாரமாக அமைந்தது.

தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் கிடைத்த வெற்றியாக இந்த நாடு பார்க்கிறது. தேர்தல் அறிக்கை மற்றம் பிரச்சார யுக்திகள் மூலம் குஜராத் மக்களின் உணர்வுகளை பிரதிபதிலுக்கும் வகையில் இருந்தது. இதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மண்ணின் மைந்தன் என்ற கோஷத்தின் மூலம் தேர்தல் பிரச்சாரத்தை பாஜக திசை திருப்ப முயற்சி செய்தது’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘குஜராத்தை சேர்ந்தவர் பிரதமராக இருக்கிறார் என்ற கோணத்திலும் பாஜக பிரச்சாரம் செய்தது. நாங்கள் குஜராத் மக்களுக்கு அருமையான முறையில் தகவல்களை கொண்டு சென்றோம். மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராகுலகாந்தி குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்தக்களை போல் நாங்கள் தெரிவிக்கவில்லை. அவர்களின் மொழி நடையிலேயே நாங்களும் பதிலளிக்க விரும்பவில்லை’’ என்றார்.