சென்னை: ராகுல்காந்தி இன்று மாலை குமரியில் பாதயாத்தை தொடங்க உள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் இன்று சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ராகுல் பாதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தச் சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் ரயிலில் கைது செய்யப்பட்டார்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாத யாத்திரை மேற்கொள்கிறார். இன்று மாலை கன்னியாகுமரியில் நடைபெறும் தொடக்க விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் ராகுலிடம் கொடியை வழங்கி யாத்திரையை தொடங்கி வைக்கிறார்.
இதை யொடிடி, பாதுகாப்பு கருதி கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திருவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ராகுல் காந்தி பாதயாத்திரை தொடங்கும்போது அவருக்கு எதிராக ‘கோபேக் ராகுல்’ இயக்கத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்று அறிவித்ததுடன், அவருக்கு எதிராக குமரியில் போராட்டம் நடத்துவேன் என்று அறிவித்திருந்தார்.
அதையொட்டி, அர்ஜுன் சம்பத் நேற்று மாலை கோவையில் இருந்து ரயில் மூலம் குமரி புறப்பட்டார். நடுவழியில் ரயில் திண்டுக்கல் வந்தபோது, காவல்துறையினர் அவரை ரயிலில் கைது செய்தனர்.