2வது தொகுதியில் போட்டியிடுவது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார்-காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி.
அமேதியில் களம் காணும் ராகுல் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்பது அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை.
‘’வயநாட்டில் ராகுல் நிற்பது உறுதி’’என கேரள முன்னாள் முதல்வரும்,மூத்த காங்கிரஸ் தலைவருமான உம்மன் சாண்டி அறிவித்து ஒரு வாரமாகியும் .டெல்லியில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்கவில்லை.
இதனால் தொண்டர்கள் சோர்ந்து போனார்கள்.
‘’வயநாட்டில் ராகுல் போட்டியிடாவிட்டால் எங்கள் கட்சியினர் தொய்வு அடைந்து விடுவார்கள்.மாநிலம் முழுவதும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று பொது வெளியில் கண் கலங்கினார்-வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர்-பாலகிருஷ்ணன்.
வயநாட்டில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் இரண்டாவது ‘ரவுண்ட்’ பிரச்சாரத்தை முடித்து விட-
அங்கு காங்கிரஸ் நிற்கிறதா ? இல்லையா என்று தெரியாமல் தவிக்கிறார்கள்- கட்சியினர்.
இந்த தகவல்கள் அனைத்தும் ராகுல் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ராகுல்- இப்போது ‘வயநாட்டில் போட்டியிடுவேன்’’ என்று சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
நேற்று இது தொடர்பாக அவர் அளித்த விளக்கம் இது:
‘’ தலைவர்கள் இரு இடங்களில் போட்டியிடுவது வழக்கம் தான்.பிரதமர் மோடி கடந்த முறை இரு தொகுதிகளில் நிற்க வில்லையா என்ன? நான் இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடம் விரைவில் முடிவெடுக்கும்’’-என்பது ராகுலின் விளக்கம்.
வயநாட்டில் போட்டியிடுவதை ராகுல் கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டதால் கேரள காங்கிரசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
—பாப்பாங்குளம் பாரதி