சென்னை,

மிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி வருகை தந்தார். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வருகை தந்தது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள், சட்டமன்ற வைர விழாவுக்கு நேற்று சென்னை வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர் நட்சத்திர ஓட்டலில் தங்கிய ராகுல் காந்தி, இன்று காலை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக அரசியல் கட்சி நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.

இதையடுத்து, ராகுல் காந்தியை புதுவை முதல்வர் நாராயண சாமி மற்றும் புதுவை காங்கிரஸ் எம்.எல்.,ஏக்கள் சந்தித்து புதுவை மாநில நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து இன்று கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல்நலம் விசாரித்த பிறகு, தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்றார்.

6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கட்சி அலுவலகத்துக்கு  வந்ததால், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

அப்போது, அவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்து காமராஜர் சிலைக்கும், தீரர் சத்தியமூர்த்தி சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் சேவாதள தொண்டர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டார்.

சத்யமூர்த்தி பவனில் அமைக்கப்பட்டுள்ள இந்திராகாந்தி நினைவு நூலகத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் கூட்ட அரங்கில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.