டில்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இரட்டை குடியுரிமை இருப்பதால், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கானது  அடிப்படை முகாந்திரமற்றது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஏற்கனவே கடந்த  2015ஆம் ஆண்டு  ராகுலின் குடியுரிமை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா  என்பவர் உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்தார். அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களில் உண்மை தன்மையில்லை எனக் கூறி உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி இந்தியா மட்டுமின்றி பிரிட்டன் குடியுரிமை பெற்று ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு ஆதாயம் தரும் பதவியில் ராகுல்காந்தி  வகித்து வருவதாக பாரதிய ஜனதா மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்து உள்துறை அமைச்சகத் துக்கும் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது.

ஆனால், அதை  தற்போது, அரசியலாக்கி, ராகுல்காந்தி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் பாஜகவினர் மும்முரம் காட்டினர்.  இதையடுத்து, இரட்டை குடியுரிமை  புகார் குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 30ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

அதேவேளையில், குடியுரிமை பிரச்னையால் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் அடிப்பபடை முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.