டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ஆஜராக, அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தை நோக்கில், காங்கிரஸ் கட்சி யினருடன் ராகுல்காந்தி பேரணியாக புறப்பட்டார்.
டெல்லி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேரணியாக செல்கிறார். அவர் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக செல்கின்றனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி சற்று நேரத்தில் ஆஜராகிறார்.
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி, காங்கிரஸ் சார்பில் சத்தியாகிரகப் பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி அமைதியான முறையில் பேரணி நடத்தப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். இன்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் எந்த வித அடக்குமுறைக்கும் காங்கிரஸ் அடிபணியாது என்று தெரிவித்தார். மோடி தலைமையிலான மத்திய அரசு உண்மையை மறைக்க முயல்வதாக குற்றம்சாட்டிய அவர், தேசிய நலனுக்காக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் எனவும் குறிப்பிட்டார். தற்போது டெல்லியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பதுகாப்பு பலப்படுத்தப்பட்டதன் மூலம் காங்கிரஸ் கட்சியை பார்த்து பிரதமர் மோடி மிரண்டுள்ளது நிரூபணமாகியுள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில், காவல்துறை அனுமதியை மீறி, ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக அமலாக்கத்துறை அலுவலகம் புறப்பட்டுள்ளனர். ராகுல் காந்தி ஜிந்தாபாத், ஜிந்தாபாத் என்ற கோஷமுடன் பேரணி நடைபெற்று வருகிறது.
Video Courtesy: Thanks ANI