டில்லி
திருப்பூர் பகுதியில் உள்ள சிறு, குறுந் தொழில்களில் உள்ள பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தியைச் சமீபத்தில் திருப்பூர் சிறு மற்றும் குறுந் தொழில் முனைவோர் சந்தித்தனர். அப்போது அவர்கள் தங்கள் குறைகளை ராகுல் காந்தியிடம் தெரிவித்துள்ளனர். பொதுவாகப் பல அரசியல் வாதிகள் குறைகளைக் கேட்பதுடன் சரி என இருக்கும் நேரத்தில் ராகுல் காந்தி இது குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் எழுதி தாம் செயல் வீரர் என நிரூபித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது கடிதத்தில்,
“அன்புள்ள ஸ்மிருதி சுபின் இரானி,
இந்த கடிதம் உங்களுக்கு நல்ல சுக வேளையில் கிடைக்கும் என எண்ணுகிறேன். இந்த கடிதம் நூல்கள் கடும் விலையேற்றம் மற்றும் அதன் கடும் விளைவுகளால் இந்திய ஆடை தொழிற்சாலைகள் துயருறுவதைப் பற்றி ஆகும்.
கொரோனா பரவலால் ஆடைத் தொழில் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகள் தளர்வு செய்யப்பட்ட பிறகும் நூற்பாலைகள் முழு அளவில் இயங்காததால் பருத்தி நூல் உற்பத்தி மிகவும் குறைந்துள்ளது. தற்போது உற்பத்தி சிறிது சிறிதாக அதிகரித்து வரும் போது விலை மற்றும் பல நடுத்தர, சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. உள்ளூர் வர்த்தக மந்தத்துடன் வியட்நாம், வங்கதேச, மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
மேலும் ஆடை உற்பத்தி தொழில் வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட குறைந்த செலவு உற்பத்தி நாடுகளிடம் ஏற்றுமதியில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அத்துடன் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி யின் தாக்கம் இன்னும் தொழில்களில் எதிரொலிக்கிறது.
இந்த பாதிப்புக்கள் அனைத்தும் இணைந்து ஏற்றுமதியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி ஏற்றுமதி மிகவும் குறைந்துள்ளது. எனது சமீபத்திய திருப்பூர் பயணத்தின் போது ஏற்றுமதியாளர்கள் இதனால் கடும் அவதியுற்று அவர்களது ஆர்டர்களை அனுப்ப முடியாமல் உள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும் விலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நூல் ஏற்றுமதியை சிறுதி நாட்களுக்கு நிறுத்தி வைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அளித்த கடிதத்தையும் இணைத்துள்ளேன்.
எனவே இந்த சூழலில் ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் உலக சந்தையில் இவர்கள் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்”
எனக் கோரிக்கை விடுத்து தாம் சொல்லில் மட்டும் அல்ல செயலிலும் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.