பெங்களூரு,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் நடக்காது என கர்நாடக பாஜக தலைவர் கே எஸ் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மஜத வின் குமாரசாமி முதல்வராகவும் காங்கிரஸ் கட்சியின் ஜி பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்த கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக வெளிப்படையாகவே பல முயற்சிகள் எடுத்து வருகிறது.
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா பாஜகவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவர் பாஜகவின் வகுப்பு வாரியான அரசியலுக்கு முடிவு கட்ட மஜத மற்றும் காங்கிரஸ் இணைந்து செயல்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு சில காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சித்தராமையா முதல்வராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநில பாஜகவின் தலைவர்களில் ஒருவரான கே எஸ் ஈஸ்வரப்பா இதுகுறித்து விமர்சித்துள்ளார். அவர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்நாளில் திருமணம் செய்துக் கொள்ள மாட்டார். அதைப் போல் சித்தராமையா தனது வாழ்நாளில் மீண்டும் முதல்வர் ஆக மாட்டார்” என தெரிவித்துள்ளார். இது காங்கிரசில் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.