கட்டாக்: ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஒடிசாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய அவர், “ஒடிசாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தால், பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் இலவசக் கல்வியைப் பெறுவார்கள்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடம் வழங்கப்படுவதை உறுதிசெய்ய காங்கிரஸ் போராடும். அப்படியாக பெண்கள் தங்களின் உரிமையப் பெற்றால்தான், தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களால் தற்காப்பு பெற முடியும்.

ஒடிசா மாநிலத்தில் 12 நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். ஆனால், ஆண்டிற்கு 7 பெண்களுக்கு மட்டுமே நீதி கிடைக்கிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் விஷயத்தில், காங்கிரஸ் கட்சி சிறிதளவும் பொறுமை காட்டாது.

நரேந்திரமோடி அரசு, பெண்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் விஷயத்தில் மிக மென்மையாக நடந்துகொள்கிறது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்த தங்களின் கருத்தை, பிரதமரும் மாநில முதல்வரும் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.

– மதுரை மாயாண்டி