டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்ப்ட்டுள்ள கடும் நிலச்சரிவால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.  தொடர்ந்து மீட்புபணிகள் நடந்து வருகின்றன  இந்த நிலச்சரிவால் பலர் காணாமல் போய் உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இன்று மக்களவையில் ராகுல் காந்தி,

“வயநாட்டில் நிகழ்ந்திருப்பது மிகப்பெரிய சோகம். மீட்பு பணி மேற்கொண்டு வரும் ராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சவாலான நேரத்தில் வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். இந்த தருணத்தில் அம்மக்களுக்கு தேவையான ஆதரவையும், இயன்ற உதவிகளையும் நாம் வழங்குவது அவசியமானது.

இது போன்ற இயற்கை பேரிடர் வயநாட்டில் 2-வது முறையாக நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் வயநாடு பகுதியில் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னை உள்ளது தெளிவாக தெரிகிறது. இதுபற்றி ஆய்வு செய்து, உயர் தொழில்நுட்ப தீர்வுகள் எவை இருந்தாலும் அதனை செயல்படுத்தப்பட வேண்டும்”

என்று மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.