வயநாடு: 3நாள் சுற்றுப்பயணமாக தனது வயநாடு தொகுதிக்கு வருகை தந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அங்கு காந்தி சிலையை திறந்து வைத்ததுடன், சட்ட மாணவிகளுடன் மதியஉணவு அருந்தினார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி ஆக இருப்பவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. இவர் அவ்வப்போது தனது தொகுதிக்கு வந்து வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். தற்போது 3 நாள் சுற்றுப்பயணமாக அவர் வயநாடு வருகை தந்துள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையம் வந்த அவருக்கு  காங்கிரஸ் தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து கார் மூலம் வயநாடு தொகுதிக்கு சென்ற ராகுல், அங்குள்ள மானந்தவாடி காந்தி பூங்காவில் சிற்பி கே.கே.ஆர்.வெங்கராவால் உருவாக்கப்பட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையை திறந்து வைத்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய ராகுல், மகாத்மா காந்தி பற்றிய சக்தி வாய்ந்த விஷயம் என்னவென்றால் அவர் எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார். இந்தியா ஒரு சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என அவர் சொன்னதுடன் மட்டுமல்லாமல், அவர் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார்.  அதுபோல, அவர்  பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் எனக் கூறிதுடன், அதுபோல  பெண்களை மரியாதையுடன் நடத்தினார்  அவர் தனது வழிகாட்டியாக கீதை, குர்ஆன், பைபிள் மற்றும் குரு கிரந்த சாஹிப் ஆகியோரை வைத்திருந்தார், என்று  கூறினார்.

“இன்று எங்களிடம் பலர் நியாயமான ஒரு நாடு வேண்டும் என்று கூறுகிறார்கள், பின்னர் அவர்கள் மற்றவர்களை அநியாயமாக நடத்துகிறார்கள். அவர்கள் பெண்களை மதிக்கின்ற இந்தியாவை விரும்புகிறார்கள், பின்னர் அவர்களே பெண்களை அவமதிக்கிறார்கள். அவர்கள் ஒரு மதச்சார்பற்ற நாடு வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்களே மதங்களைப் வித்தியாசமாக பார்க்கிறார்கள் . ” “என்னைப் பொறுத்தவரை, சிலை ஆளுமை பற்றியதை விட நடைமுறையைப் பற்றியது,” என்று அவர் மேலும் கூறினார்.

அதையடுத்து,  மானந்தவாடி பகுதியில், சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் (Common Law Admission Test) வெற்றி பெற்ற மாணவிகளுடன்கலந்துரையாடியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த கலந்துரையாடலின்போது, சட்ட மாணவிகளிடம் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து  கேள்வி எழுப்பியதுடன் பல ஆலோசனைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து இரண்டு குடிநீர் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பதிஞ்சரதாராவில் உள்ள கூவலத்தோடு காலனியிலும், மற்றொன்று பொன்குழியில் உள்ள கட்டுநாயக்கா காலனியிலும் தொடங்கி வைக்கிறார்.

நாளை (ஆகஸ்ட் 17 ஆம் தேதி)  காங்கிரஸ் தலைவர் ராகுல் கல்பேட்டா மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பார், அதைத் தொடர்ந்து கரசேரி பஞ்சாயத்து விவசாயிகள் தினத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார், அங்கு திருவச்சேரி, வட கரசேரி, கரசேரி வங்கி ஆடிட்டோரியத்தில் விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.  அதன்பிறகு, அவர் மலப்புரத்தில் உள்ள வண்டூரில் உள்ள காந்தி பவன் ஸ்நேகராமம் முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுடன் மதிய உணவு சாப்பிடுகிறார்.